மக்களுக்கு சலுகை வழங்கும் நோக்குடன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கான வரிகள் அனைத்தையும் நீக்கியுள் ளோம். இதன் பயனாக தற்போது சந்தை யில் ஒரு கிலோ கிராம் அரிசியை 66 ரூபா வாக விற்க முடியும். ஆனால் வர்த்தகர்களினால் அரிசியின் விலை இதுவரையில் குறைக்கப்பட வில்லை. இது பெரும் அநீதியாகும். ஆகவே மக்களின் மீது அக்கறை கொண்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அரிசியை புதிய விலையின் பிரகாரம் உடனடியாக விற்பனை செய்யுமாறு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுத்தார். நாட்டின் அரிசி தட்டுப்பாடை போக்கும் வகையில் 23 ஆயிரத்து 800 மெட்ரிக் டொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அரிசி இறக்குமதி செய்யப்படும். தட்டுபாட்டின் காரணமாக உயர்ந்துள்ள அரிசியின் விலையை குறைக்கும் நோக்குடன் அரிசி மீதான அனைத்து வரிகளையும் நீக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நிதி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் அங்கு குறிப்பிடுகையில், நாட்டில் அரிசி தட்டுப்பாடு பெருமளவில் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக அரிசி விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் அரிசியை பெற்றுக்கொடுக்கும் வகையில் வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய திட்டமிட்டோம். இதன்பிரகாரம் தற்போது இறக்குமதி செய்யப்பட்ட அரிசி நான்கு நாட்களுக்கு முன்பாகவே சந்தைக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மக்களின் நலனுக்காக இறக்குமதி வரி உள்ளிட்ட அனைத்து விதமான வரிகளிலிருந்து அரிசி இறக்குமதியை விலக்களித்தோம். ஆகையால் குறித்த வரி விதிப்புகள் நீங்கலாக ஒரு கிலோ கிராம் அரிசியை 66 ரூபாவிற்கு தற்போதைக்கு விற்பனை செய்ய முடியும். ஆகவே குறைந்தளவில் அரிசி விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் எடுத்திருந்தும் வர்த்தகர்கள் குறித்த நிவாரணத்தை மக்களுக்கு இன்னும் வழங்கவில்லை. ஆகவே அரசாங்கம் என்ற வகையில் நாம் செய்ய வேண்டிய காரியத்தை செய்த போதிலும் இன்னும் வர்த்தகர்களினால் மக்களுக்கு போய் சேர வேண்டிய சலுகை செல்லவில்லை. ஆகவே தயவு செய்து வர்த்தகர்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அரிசியை புதிய விலையின் பிரகாரம் நுகர்வோருக்கு வழங்க வேண்டும். ஏற்கனவே 76 ரூபாவாக குறைக்கப்பட்ட அரிசியின் விலையை ஜனாதிபதியும் பிரதமரும் தலையிட்டு வரிகள் விலக்களிக்கப்பட்டதன் பின்னர் மேலும் 10 ரூபா குறைக்கப்பட்டது. இதன்பிரகாரம் தற்போது ஒரு கிலோ கிராம் அரிசியின் விலை 66 ரூபாவாக குறைக்கப்பட வேண்டும் கணிப்பிடுகின்றேன் என்றார். கேள்வி தற்போது ஒரு கிலோக கிராம் அரிசியின் விலை எத்தகையதாக அமைய வேண்டும்? பதில் மன்னிக்கவும். இந்த கேள்விக்கு பதில் அளிப்பதற்கு எனக்கு விருப்பம் இல்லை. இந்த கேள்வியை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரிடமே கேட்க வேண்டும் என்றார்.






