இலங்கைக் கிரிக்கெட் அணித் தலைமையில் எவ்வித மாற்றமும் தற்போது ஏற்படாது என்றும் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் வரை அஞ்சலோ மெத்தியூஸே தலைவராக நீடிப்பார் என்றும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவில் இலங்கை அணி அடைந்த படுதோல்விக்கு அணித் தலைவரின் பொறுப்பற்ற தலைமையும் ஒரு காரணம்தானே. அதனால் தலைவரை மாற்றும் நோக்கம் ஏதும் இருக்கிறதா என்று திலங்க சுமதிபாலவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் பதிலளிக்கையில், தென்னாபிரிக்காவில் இலங்கை அணி அடைந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு எந்த காரணமும் கூற முடியாது என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.
போட்டி ஒன்றையோ போட்டித் தொடரையோ தோற்பதில் எதுவித பிரச்சினையும் இல்லை. ஆனால் இது போன்ற படுதோல்வி அடைவதை நாம் அனுமதிக்க முடியாது என்றார்.
அப்படியானால் அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு பதிலளித்த தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜயசூரிய, போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது வீரர்கள் குறித்தோ தலைமை குறித்தோ விமர்சிப்பது சரியல்ல.
ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர் முடிந்ததும் இதுபற்றி முடி வெடுப்போம்.இந்தத் தொடரையும் இழந்தால் ஏதாவது மாற்றம் நிச்சயம் வரும் என்றார்.





