ஓமந்தை இராணுவ முகாமை அகற்றுவதற்கு எவ்விதமான தேவையும் இதுவரையில் ஏற்படவில்லை. எனவே குறித்த இராணுவ முகாம் தொடர்ந்தும் அந்த பகுதியில் செயற்படும் என தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன, ஆனால் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில், ஓமந்தையில் அமைந்துள்ள இராணுவ முகாம் அகற்றப்படவில்லை. ஓமந்தை இராணுவ முகாம் அகற்றப்பட்டு விட்டதாகவும் அங்கிருந்த படையினர் கொழும்பிற்கு அழைக்கப்பட்டதாகவும் வெளியான தகவல்களில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை.
ஆனால் இராணுவ முகாமுடன் இணைந்திருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் மாத்திரம் விடுவிக்கப்பட்டு வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் இங்கு காணிகள் தொடர்பான சிக்கல் நிலை காணப்படுகின்றது. இவற்றை எம்மால் தீர்த்து வைக்க முடியாது. எனவே தான் காணிகளை அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளோம். தொடர்ந்தும் அங்கு இராணுவ முகாம் இயங்குவதுடன், படையினர் கடமைகளில் ஈடுபடுவார்கள் என குறிப்பிட்டார்.






