சற்றுமுன்னர் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பன்னீர்செல்வம் தெரிவித்தவை..
Written By We Are Anonymous on Wednesday, February 8, 2017
பதவி விலகிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்து பின்னர் அளித்த பேட்டி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறிய அவர், 75 நாட்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றும் ஒரு முறை கூட ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்திக்கவே இல்லை என்றும் கூறினார். இதுதவிர தற்போதைய தலைமை மீதுள்ள தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர் தன் மனதில் உள்ள விஷயங்களில் நூற்றில் 10 சதவீதம் தான் வெளியே சொல்லி இருப்பதாக கூறினார். இந்த பேட்டியை அடுத்து அவர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் இன்று அவரது இல்லத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.விக்கு எந்த நிலையிலும் நான் துரோகம் செய்யவில்லை. பன்னீர்செல்வம் துரோகம் செய்துவிட்டான் என ஒருபோதும் ஏற்பட்டதில்லை. ராஜினாமாவை திரும்பப் பெறும் கட்டாயச் சூழல் ஏற்பட்டால் திரும்பப் பெறுவேன். ஆளுநர் சென்னை வந்ததும் அவரை சந்திப்பேன். சட்டமன்றம் கூடும்போது எனக்கான ஆதரவு தெரியவரும். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன். அ.தி.மு.க.வுக்கு சோதனை ஏற்பட்ட காலத்தில் 2 முறை முதல்வராக இருந்துள்ளேன். என் மீதான குற்றச்சாட்டுக்கு காலம் பதில் சொல்லும் என அவர் கூறினார். இதேவேளை தற்போது, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலும், கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தங்கியிருக்கும் போயஸ் கார்டனிலும் அவரவர் ஆதரவாளர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். இதனால் இரு பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போயஸ் கார்டனில் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை அவசரமாக கூட்டிய நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்குப் பிறகு அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும். அத்துடன் முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் புதிய வெளியாகியுள்ளது.
சற்றுமுன்னர் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பன்னீர்செல்வம் தெரிவித்தவை..
2017-02-08T02:05:00-08:00
We Are Anonymous
India News|






