இங்கிலாந்துடன் மோதும் அணியை தெரிவுசெய்ய முடியாமல் திணறும் இலங்கை தெரிவுக்குழு
Written By We Are Anonymous on Saturday, February 11, 2017
இங்கிலாந்து ஏ அணி தற்போது இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த அணியுடன் இலங்கை அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்தப் போட்டித் தொடர் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை ஏ அணி இன்னும் தெரிவுசெய்யப்படவில்லை. இலங்கை அணித் தலைவர் யார் என்பது கூட இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இங்கிலாந்து ஏ அணியும் இலங்கை ஏ அணியும் மோதும் கிரிக்கெட் தொடர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து ஏ அணித் தலைவர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் அண்டி பிளவர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். ஆனால் இலங்கை அணி சார்பாக பயிற்சியாளர் அவிஷ்க குணவர்தன மட்டுமே ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். அப்போது இலங்கை அணி ஏன் இன்னும் தெரிவுசெய்யப்படவில்லை? இது முறையல்லவே. ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் இரண்டு அணித் தலைவர்களும் கலந்துகொள்வதுதானே வழக்கம் என்று கேட்டதற்கு பதிலளித்த இலங்கை ஏ அணியின் பயிற்சியாளர் அவிஷ்க குணவர்தன, உண்மைதான் இரண்டு அணி வீரர்களும் கலந்துகொள்ளவேண்டும். ஆனால் எமக்கிருக்கும் பிரச்சினை வேறு. நாம் இருபது வீரர்கள் கொண்ட அணியுடன் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தோம். அதில் அனைத்து வீரர்களும் திறமையானவர்கள்தான். அதனால் யாரை இணைத்துக் கொள்வது யாரை தவிர்ப்பது என்பதில் எம்மிடமே குழப்பங்கள் நீடிக்கின்றன. அதுமட்டுமன்றி அந்த இருபது வீரர்களில் மூவர் மாற்றீடாக தென்னாபிரிக்காவில் இலங்கை தேசிய அணியில் இணைந்துள்ளனர். இதன் காரணமாகவே நாம் இலங்கை அணியைத் தெரிவு செய்ய கால தாமதமாகின்றது என்றார். இலங்கை ஏ அணியில் சந்திமால் விளையாடுவாரா என்று கேட்டதற்கு அதை தெரிவுக்குழுதான் முடிவுசெய்ய வேண்டும் என்றார்.
இங்கிலாந்துடன் மோதும் அணியை தெரிவுசெய்ய முடியாமல் திணறும் இலங்கை தெரிவுக்குழு
2017-02-11T00:20:00-08:00
We Are Anonymous
Sports News|






